சிரியா ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - காரணம் என்ன?

ஞாயிற்றுக்கிழமை முதல் நடந்துவரும் மோதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.;

Update:2025-07-16 20:39 IST

டமாஸ்கஸ்,

சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார்.

அதேவேளை, முன்னாள் அதிபர் அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சிரியாவில் டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்த மதத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேலிலும் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர்.

இஸ்ரேலின் எல்லை மாகாணமான சிரியாவின் ஸ்விடா மாகாணத்தில் வசித்து வரும் டுரூஸ் மதத்தினருக்கும், இஸ்லாமிய மதத்தின் சன்னி பிரிவை சேர்ந்த பெடொய்ன் பழங்குடியிருனருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்தது. இரு பிரிவிலும் செயல்பட்டு வரும் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மோதலை தடுக்க ஸ்விடா மாகாணத்திற்கு கூடுதல் அரசுப்படைகளை சிரியா அனுப்பியது. ஆனால், பெடொய்ன் பழங்குடியிருனருடன் சேர்ந்து அரசுப்படைகளும் டுரூஸ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடந்துவரும் மோதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலில் வசித்து வரும் டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மக்களை பாதுகாக்கக்கோரி இஸ்ரேலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நூற்றுக்கணக்கான டுரூஸ் மக்கள் இஸ்ரேலில் இருந்து எல்லை வழியாக சிரியாவின் ஸ்விடா மாகாணத்திற்குள் நுழைந்து வருகின்றனர். மேலும், சிரியாவில் அரசுப்படை தாக்குதலுக்கு அஞ்சி பல டுரூஸ்கள் இஸ்ரேலுக்குள் தஞ்சமடைய எல்லையில் குவிந்து வருகின்றனர். இதனால், இஸ்ரேல் - சிரியா எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. டமாஸ்கசில் உள்ள சிரியா ராணுவ தலைமையக கட்டிடம் மீது இஸ்ரேல் விமானப்படை ஏவுகணை, குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியாவின் ஸ்விடா மாகாணத்தில் வாழும் ட்ரூஸ் மதத்தினருக்கு ஆதரவாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சிரியாவில் வாழும் ட்ரூஸ்களை சிரியா பாதுகாக்கவில்லையென்றால் அரசு படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்