ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை
பணமோசடி புகார் தொடர்பான வழக்கில் நஜீப் ரசாக் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது.;
கோலாலம்பூர்,
மலேசியாவில் கடந்த 2009-2018 காலகட்டத்தில் பிரதமராக பதவி வகித்த நஜீப் ரசாக், வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறுவதற்காக 1எம்.டி.பி. என்ற அமைப்பை உருவாக்கினார். மலேசியாவின் மேம்பாட்டிற்காக இந்த நன்கொடைகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நன்கொடை என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை பெற்று நஜீப் ரசாக் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையின் அடிப்படையில், கடந்த 2018-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். கோர்ட்டு விசாரணையில் நஜீப் ரசாக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் மீதான பணமோசடி புகார் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த வழக்கிலும் நஜீப் ரசாக் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கோர்ட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.