ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா..? டிரம்ப்-ஜெலன்ஸ்கி நாளை சந்திப்பு
புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, டிரம்ப்பை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறார்.;
கோப்புப்படம்
உக்ரைன்,
உக்ரைன்-ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
நேற்று நிருபர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, இதனை உறுதி செய்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘28-ந் தேதி (நாளை) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டிரம்பை சந்திக்கிறேன். 20 நிபந்தனைகளில் 90 சதவீத நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த சந்திப்பின் போது பொருளாதார ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும். பிராந்திய பிரச்சினைகளையும் எழுப்ப உள்ளோம்.
முக்கியமான பிரச்சினைகளைப் பொறுத்தவரை, டான்பாஸ் மற்றும் சபோரிஜியா அணுமின் நிலையம் குறித்து நாங்கள் விவாதிப்போம், மேலும் பிற பிரச்சினைகளையும் நாங்கள் நிச்சயமாக விவாதிப்போம்” என்றார். இந்த பேச்சுவார்த்தை மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.