நண்பர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்; டிரம்ப்
இந்தியா - அமெரிக்கா வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.;
டாவோஸ்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் போரை நிறுத்த உதவாமல் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்தார். இதன் மூலம் இந்தியா - அமெரிக்கா வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும், இருநாட்டு உறவில் விரிசல் நிலவி வருகிறது.
அதேவேளை, இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருநாட்டை சேர்ந்த வர்த்தகத்துறை முக்கிய அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக வர்த்தக மன்றத்தின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்றார். இந்த மாநாட்டின்போது செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் இடம் இந்தியாவுடனான வர்த்தகம், இந்திய பிரதமர் மோடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிரம்ப் கூறுகையில், இந்திய பிரதமர் மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் ஒரு சிறந்த மனிதர்... மேலும் அவர் எனது நண்பர். இந்தியா - அமெரிக்கா மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளோம்’ என்றார்.