சிரியா: ஆயுதக்குழுவினர் நடத்திய டிரோன் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் பலி
ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்ததில் குர்திஷ் ஆயுதக்குழு முக்கிய பங்காற்றியது.;
டமாஸ்கஸ்,
சிரியாவில் அகமது ஹுசேன் அல் சாரா தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இதனிடையே, அந்நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்ததில் குர்திஷ் ஆயுதக்குழுவின் சிரியா ஜனநாயகப்படை முக்கிய பங்காற்றியது. அந்த ஆயுதக்குழு தற்போது உள்நாட்டு போரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை கண்காணித்து வந்தது.
இதனிடையே, அந்த ஆயுதக்குழுவை சிரியா அரசுப்படையுடன் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பாதுகாப்பை குர்திஷ் ஆயுதக்குழு திரும்பப்பெற்றது.
மேலும், சிரியாவில் குர்திஷ் ஆயுதக்குழுவினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சிரியா அரசுப்படைகள் கைப்பற்ற நடவடிக்கை எடுத்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையே தற்காலிய சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் குர்திஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை அடைத்து வைத்துள்ள சிறைச்சாலைகள் அரசுப்படை வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிரியாவின் ஹசஹா மாகாணத்தில் குர்திஷ் ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆயுத தயாரிப்பு ஆலையை அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் (அரசுப்படையினர்) நேற்று கைப்பற்றினர். அந்த ஆலையில் பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆலை மீது குர்திஷ் ஆயுதக்குழுவினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.