7-வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி சீனா பயணம்

இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஆகஸ்டில் இஸ்லாமாபாத்தில் 6-வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.;

Update:2026-01-03 19:58 IST

இஸ்லாமாபாத்,

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் 7-வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும்படி, பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரியான இஷாக் தாருக்கு சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யி அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பின் பேரில், வெளியுறவு மந்திரிகளின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இஷாக் தார் இன்று சீனாவுக்கு புறப்பட்டு சென்றார்.

இதுபற்றி பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட செய்தியில், சீன வெளியுறவு மந்திரியின் அழைப்பையேற்று சீனாவுக்கு தார் சுற்றுப்பயணம் செய்கிறார்.

2026-ம் ஆண்டில், சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டின் முதல் முக்கியஸ்தராக தார் இருப்பார். இந்த பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு தார் மற்றும் வாங் யி இருவரும் கூட்டாக தலைமையேற்பார்கள் என தெரிவித்து உள்ளது.

நடப்பாண்டுடன், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆகவே, அதனை குறிக்கும் வகையில், இரு வெளியுறவு மந்திரிகளும் முழு அளவில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்வார்கள். அதனுடன், மண்டல மற்றும் உலகளாவிய வளர்ச்சிகளில் பகிரப்பட்ட விருப்பங்களை பற்றி ஆலோசனைகளையும் மேற்கொள்ள உள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஆகஸ்டில் இஸ்லாமாபாத் நகரில் 6-வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்