ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
கடினமான காலங்களில் இந்தியாவும், ரஷ்யாவும் தோளோடு தோள் நின்று முன்னேறிச் சென்றதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
பீஜிங்,
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். மாநாட்டிற்கு இடையே ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசி கலந்துரையாடினர். மாநாட்டிற்கு பிறகு ரஷிய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் ஒரே காரில் பயணித்தனர். பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முன்னதாக உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி “உக்ரைனில் அமைதியை கொண்டுவருவதற்கான சமீபத்திய முயற்சிகள் அனைத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவார்கள் என்று நம்புகிறோம். உக்ரைன் மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அந்த பிராந்தியத்தில் நிரந்தர அமைதியைக் கொண்டுவருவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.
கடினமான காலங்களிலும் இந்தியாவும், ரஷ்யாவும் எப்போதும் தோளோடு தோள் நின்று முன்னேறிச் சென்றுள்ளன. உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு இந்தியா-ரஷ்யா இடையிலான நெருங்கிய உறவு முக்கிய பங்காற்றுகிறது. ரஷிய அதிபர் புதினை வரவேற்க இந்தியா ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார். முன்னதாக இந்தியாவில் டிசம்பர் மாதம் நடைபெறும் உச்சிமாநாட்டில் புதின் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, ரஷிய அதிபர் புதின் பேசுகையில், “உக்ரைனில் மோதல் சூழ்நிலை படையெடுப்பின் விளைவாக உருவாகவில்லை, மாறாக, உக்ரைனில் மேற்கத்திய நட்பு நாடுகளின் ஆதரவுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் விளைவாக ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் அலாஸ்கா உச்சி மாநாட்டில் எட்டப்பட்ட புரிதல்கள் உக்ரைனில் அமைதிக்கான வழியை ஏற்படுத்தும் என நம்புகிறோம். உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண சீனாவும், இந்தியாவும் மேற்கொண்ட முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.