துபாய், மதுரை இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி
துபாயில் இருந்து மதுரைக்கு இன்று காலை 5 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்படவிருந்தது.;
துபாய்,
ஐக்கிய அரசு அமீரகத்தின் துபாயில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை உள்ளது. இந்நிலையில், துபாயில் இருந்து மதுரைக்கு இன்று காலை 5 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்படவிருந்தது.
ஆனால், விமானம் புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டது. கால தாமதத்திற்கான காரணத்தை ஸ்பைஸ்ஜெட் விமான அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதனால், துபாய் விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
குறிப்பாக, பட்ஜெட் விமான சேவை என்பதால் பயணிகளுக்கு முறையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பெண்களும், முதியோர்களும், நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக சிரமம் அடைந்தனர்.
பின்னர், 10 மணிநேர தாமதத்திற்குப்பின் மாலை 3 மணிக்கு துபாயில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மதுரைக்கு புறப்பட்டது. 10 மணிநேரத்திற்குமேல் தாமதமாக புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் மீது இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்தினர்.