' 'இலங்கை மித்ர விபூஷண்' விருது இந்திய மக்களுக்கு கிடைக்கப்பெற்ற உயர் மரியாதை' - பிரதமர் மோடி
'இலங்கை மித்ர விபூஷண்' விருது இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற உயர் மரியாதை என்று பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.;
கொழும்பு,
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றிருக்கிறார். அங்கு இந்தியா மற்றும் இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கவுரவிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தால் பிரதமர் மோடிக்கு மதிப்புமிக்க இலங்கை மித்ர விபூஷண பதக்கம் வழங்கப்பட்டது.
வெளிநாட்டு சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 22வது சர்வதேச விருதாகும். உலகளாவிய நட்புகளை அங்கீகரிப்பதற்காக சிறப்பாக நிறுவப்பட்ட இந்த பதக்கம், இந்தியா-இலங்கை உறவுகளின் ஆழத்தையும் அரவணைப்பையும் பிரதிபலிக்கிறது.
இந்நிலையில், 'இலங்கை மித்ர விபூஷண்' விருது இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதை என்று பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார். அதில்,
'ஜனாதிபதி திசாநாயக்க அவர்களால் இன்றைய தினம் 'இலங்கை மித்ர விபூஷண்' என்ற விருது எனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விஷயமாகும். இந்த உயரிய கவுரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும். அத்துடன் இந்திய - இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் நட்புறவை இது குறித்து நிற்கின்றது. இந்த கவுரவத்துக்காக இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்' என்று தெரிவித்திருக்கிறார்.