பாலஸ்தீன அதிபரின் அமெரிக்க விசா ரத்து: டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை
பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் மற்றும் 80 அதிகாரிகளின் விசாக்களை அமெரிக்கா திடீரென ரத்து செய்துள்ளது;
Photo Credit: AP
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா மண்டலத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.இதற்கிடையே பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக விரைவில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானத்தை கொண்டு வர உள்ளதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்த நிலையில் பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் மற்றும் 80 அதிகாரிகளின் விசாக்களை அமெரிக்கா திடீரென ரத்து செய்துள்ளது. இதற்கான உத்தரவை வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ பிறப்பித்துள்ளார். அடுத்த மாதம் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், அவரது அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாலஸ்தீன விடுதலை அமைப்புடன் தொடர்புடையவர்கள் உள்பட பாலஸ்தீன அதிகாரிகளிடமிருந்து வரும் புதிய விசா விண்ணப்பங்களை நிராகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முடிவு அமெரிக்காவின் சட்டங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு இணங்க எடுக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் அமைப்புக்கு பாலஸ்தீனம் உதவுவதாக குற்றம் சாட்டியுள்ளது.விசா ரத்து நடவடிக்கைக்கு பாலஸ்தீன அதிபர் அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த முடிவை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.