2-வது நீண்டகாலம் பணியாற்றும் இந்திய பிரதமர்: மோடிக்கு தொலைபேசியில் அமீரக அதிபர் வாழ்த்து

வரும் காலத்திலும் இந்திய மக்களுக்கு சேவை புரிவதில் வெற்றியடைய வாழ்த்துவதாக அமீரக அதிபர் தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-31 05:41 IST

அபுதாபி,

இந்தியாவில் தொடர்ந்து 3 முறை பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய வரலாற்றில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். அதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது 11 ஆண்டுகளை கடந்து இந்தியாவின் 2-வது நீண்டகால பொறுப்பில் உள்ள பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார். இதில் அமீரகம்-இந்தியா இடையிலான விரிவான கூட்டு முயற்சிகள் குறித்து பேசப்பட்டது.

அதேபோல் நிலைத்தன்மை வாய்ந்த வளர்ச்சி மற்றும் பரஸ்பர இருதரப்பு மக்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்க கூடிய அனைத்து வாய்ப்புகளிலும் ஒத்துழைப்பு பெறுவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்திய வரலாற்றில் 2-வது நீண்டகாலம் பணியாற்றும் பிரதமராக பெருமை சேர்த்த மோடிக்கு அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் வாழ்த்து தெரிவித்தார். இதில் அவர் இதேபோல வரும் காலத்திலும் இந்திய மக்களுக்கு சேவை புரிவதில் வெற்றியடைய வாழ்த்துவதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து அமீரக அதிபரின் வாழ்த்துகளுக்கும், இந்தியா மற்றும் அதன் மக்களுக்கு அவர் வெளிப்படுத்திய அன்பான உணர்வுகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்