ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படம் திறப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
மு.க.ஸ்டாலின் பேசிய உரை இன்று காலை 7.30 மணிக்கு தமிழகத்தில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து நடந்த நிகழ்வில், பெரியாரின் மரபு மற்றும் திராவிட சிந்தனையின் ஆழமான தாக்கம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
மேலும், திராவிட இயக்கம் ஏற்படுத்திய சமூக மாற்றங்களை விளக்கி, “The Dravidian Pathway” w “The Cambridge Companion to Periyar” ஆகிய நூல்களையும் வெளியிட்டார். இந்த நூல்கள் பெரியாரின் சீர்திருத்தங்கள், தத்துவம் மற்றும் சமூக மாற்றத்திற்கு அவரது பங்களிப்புகளை விளக்குவதாக அமைந்துள்ளன. இந்த நிகழ்வு, பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்துவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
முன்னதாக இந்த உருவப்பட திறப்பு தொடர்பாக லண்டனில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோவை நேற்று அவர் வெளியிட்டார்.
அந்த வீடியோவில், 'தமிழர்களுக்கு என்னுடைய அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 4-ந் தேதி (நேற்று) மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் உலகப் புகழ்மிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நம்முடைய சுயமரியாதை தலைவர், தன்மானத் தலைவர் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்க இருக்கிறேன் என்ற செய்தி உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். அதை திறந்து வைத்து, பேசுவதை எண்ணி பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன்.
ஏனென்றால் அவர் தமிழர் தலைவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு தலைவர் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தன்மானத்தை காத்த தலைவராக, சுயமரியாதையை காத்த தலைவராக விளங்கி கொண்டு இருக்கக்கூடியவர். அவருடைய உருவப் படத்தை திறந்து வைத்து பேச இருக்கிறேன் என்பதை உங்களுக்கெல்லாம் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என பேசி உள்ளார்.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு தமிழகத்தில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.