ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிமன்றத்தில் வாதிட்டு வென்றது தி.மு.க. ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2024-03-26 14:16 GMT

தூத்துக்குடி,

ராமநாதபுரம், தூத்துக்குடி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். அதைக்கூட டிவியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என கூறினார். தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தை மறக்க முடியுமா? தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தை தற்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்துதான்  துப்பாக்கிச்சூடு நடந்ததாக விசாரணை ஆணையம் கூறியது. தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபடாதவர்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்ட கரும்புள்ளி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.

தேர்தல் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற அறப்போராட்டம். தூத்துக்குடி மக்களோடு மக்களாய் கனிமொழி உள்ளார். தமிழகம் ஒட்டுமொத்த இந்தியாவிற்காக பேசுபவர் கனிமொழி. நாங்கள் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளோம். ஊர் சுற்ற அல்ல. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்மை செய்யும் கட்சி தி.மு.க. சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது.

கச்சத்தீவு மீட்கப்படும் என்று சுஷ்மா சுவராஜ் சொன்னார். இன்று வரை பா.ஜ.க. அதனை செய்துள்ளதா?மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத மோடி விஸ்வ குருவா? அல்லது மவுனகுருவா? மீனவர்கள் கைது, அபராதம் படகு பறிமுதல் என மோடி ஆட்சியில் இலங்கை அறிவிக்கப்படாத போர்.

மோடியை பற்றி பாசாங்கிற்கு கூட விமர்சனம் செய்யாதவர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை பிரதமர் மோடி தட்டிகேட்க தயங்குவது ஏன்?

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிமன்றத்தில் வாதிட்டு வென்றது திராவிடமாடல் ஆட்சி. பேரு மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம். அதில், 60% நிதி மாநில அரசுதான் தருகிறது. இப்படி ஸ்டிக்கர் ஒட்டி கேவலமாக பிரசாரம் செய்கின்றனர் பா.ஜ.க.வினர். 

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் தருவோம் என்று சொன்னீர்களே? பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. விவசாயிகளை எதிரி போல் நடத்துவது தான் பா.ஜ.க.,வின் அரசின் மாடலா? தி.மு.க. அரசின் கொள்கை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே.

பழனிசாமி யார்? நேற்று யாரோடு இருந்தார்? இன்று யாரோடு இருக்கிறார்? நாளை யாருடன் இருப்பார்? நேரத்திற்கு ஏற்றார் போல் மாறுவார் என்பதை மக்கள் எடை போட்டு தீர்ப்பளிப்பார்கள். தி.மு.க.,வுக்கும் அ.தி.மு.க.,விற்கும்தான் போட்டி என பழனிசாமி பேசியுள்ளார் அந்த அளவிற்காவது அவருக்கு புரிதல் இருக்கே என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பழனிசாமி அவர்களே களத்தில் மோதுவோம் மக்கள் தீர்ப்பளிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்