அடுத்து 'இந்தியா' கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் - மல்லிகார்ஜுன கார்கே

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 'இந்தியா' கூட்டணி ஆட்சி அமைக்கும் என மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-15 10:25 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது;-

"4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் 'இந்தியா' கூட்டணி வலுவாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை வழியனுப்பி வைக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். ஜூன் 4-ந்தேதி 'இந்தியா' கூட்டணி புதிய ஆட்சியை அமைக்கப் போகிறது.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள். இதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முதன்முதலில் கூறினார். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்று கர்நாடகத்தில் கூறினார்கள். அதே போல் உத்தர பிரதேசத்தில் பலர் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவது குறித்து பேசியிருக்கிறார்கள்.

இவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த விவகாரத்தில் அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? இவ்வாறு பேசும் நபர்களை கட்சியில் இருந்து ஏன் நீக்கவில்லை? அரசியலமைப்பு குறித்து யாரும் இப்படி பேசக்கூடாது."

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவ் பேசுகையில், "உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில், 79 இடங்களில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறும்" என்று கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்