2-வது டி20: கடைசி பந்தில் பவுண்டரி.. பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன் தேவை என்ற நிலையில் ஷாகீன் அப்ரிடி பந்துவீசினார்.;

Update:2025-08-03 09:32 IST

image courtesy:ICC

புளோரிடா,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 40 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 134 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பாகவே நகர்ந்தது. இருப்பினும் இலக்கு குறைவானது என்பதால் குடகேஷ் மோட்டி (28 ரன்கள்), ஷாய் ஹோப் (21 ரன்கள்), ரோஸ்டன் சேஸ் (16 ரன்கள்) ஆகியோரின் கணிசமான ஒத்துழைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை நோக்கி பயணித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான அந்த ஓவரை பாகிஸ்தான் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி வீசினார். அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த அவர் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் கடைசி பந்தை எதிர்கொண்ட ஹோல்டர் பவுண்டரி அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்து திரில் வெற்றி பெற்றது. ஹோல்டர் 16 ரன்களுடனும், ஷமர் ஜோசப் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆல் ரவுண்டராக ஜொலித்த ஹோல்டர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்