ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்களில் ஆல் அவுட்

ஆஸ்திரேலியா தரப்பில் கேமரூன் க்ரீன் 6 ரன்னுடனும், லயன் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.;

Update:2025-07-05 07:30 IST

Image Courtesy: @ICC

க்ரெனடா,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 66.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 63 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட் வீழ்த்தினார். நேற்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியை போல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக பிரண்டன் கிங் 75 ரன் எடுத்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 2ம் நாள் முடிவில் 2 விக்கெட்டை இழந்துப் 12 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 45 ரன் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் கேமரூன் க்ரீன் 6 ரன்னுடனும், லயன் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்