3-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்த்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.;
image courtesy:ICC
மெக்காய்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் கெய்ன்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்திலும், மெக்காயில் நடந்த 2-வது ஆட்டத்தில் 84 ரன் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்காய் நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 431 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் (142 ரன்கள்), மிட்செல் மார்ஷ் (100 ரன்கள்), கேமரூன் கிரீன் (118 ரன்கள்) ஆகியோர் சதமும், அலெக்ஸ் கேரி அரைசதமும் (50 ரன்கள்) அடித்தனர்.
பின்னர் 432 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மார்க்ரம் 2 ரன்களிலும், ரிக்கல்டன் 11 ரன்களிலும், பவுமா 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய டோனி டி ஜோர்சி 33 ரன்களிலும், பிரெவிஸ் 49 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களில் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி 150 ரன்களை கடந்தது. வெறும் 24.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா 155 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 276 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்த்து ஆறுதல் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா தரப்பில் கூப்பர் கனோலி 5 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட் மற்றும் சீன் அபோட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்டஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.