3வது ஒருநாள் போட்டி; நியூசிலாந்துக்கு 291 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 66 ரன்கள் எடுத்தார்.;
Image Courtesy: AFP
ஆக்லாந்து,
இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 113 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்ணாண்டோ ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் அவிஷ்கா பெர்ணாண்டோ 17 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து குசல் மெண்டிஸ் களம் புகுந்தார். குசல் மெண்டிஸ் - பதும் நிசாங்கா இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் பதும் நிசாங்கா 66 ரன்னிலும், குசல் மெண்டிஸ் 54 ரன்னிலும், அடுத்த வந்த காமிந்து மெண்டிஸ் 46 ரன்னிலும், சரித் அசலங்கா ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து ஜனித் லியனகே மற்றும் சாமிந்து விக்ரமசிங்கே ஜோடி சேர்ந்தனர். இதில் லியனகே ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. இதில் விக்ரமசிங்கே 19 ரன், வனிந்து ஹசரங்கா 15 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய லியனகே அரைசதம் அடித்த நிலையில் 53 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 290 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட், மிட்செல் சாண்ட்னெர் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 291 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட உள்ளது.