ஆண்டர்சன்-தெண்டுல்கர் டிராபி: இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி - ஆஸி.முன்னாள் கேப்டன் பாராட்டு
இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆண்டர்சன்-தெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது.;
சிட்னி,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ டிராபிக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள். அதனால் இங்கிலாந்து மண்ணில் இளம் இந்திய அணி படுதோல்வியை சந்திக்கும் என்பதே பலருடைய கணிப்பாக இருந்தது. ஆனால் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி தொடரை சமன் செய்து அசத்தியது.
இந்நிலையில் முன்னணி வீரர்கள் இல்லாமல் தொடரை சமன் செய்த இளம் இந்திய அணிக்கு இது பெரிய வெற்றி என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டு தெரிவித்துள்ளார். அதே சமயம் இத்தொடர் இங்கிலாந்துக்கு சொந்த மண்ணில் பெரிய தோல்வியைப் போன்றது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் 2 - 2 என்ற கணத்தில் தொடரில் சமன் செய்துள்ளது. ஒருவேளை நான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தால் அதற்காக ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பேன். ஏனெனில் சொந்த மண்ணில் நான் வெற்றி பெற விரும்புவேன். இங்கிலாந்து தொடரை வெல்வோம் என்ற எதிர்பார்ப்புடன் வந்திருப்பார்கள்.
இந்தியாவை நான் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சாதித்துள்ளார்கள். ஒருவேளை இந்தியா தோல்வியை சந்தித்திருந்தால் மக்கள் அதை மதித்திருப்பார்கள். ஏனெனில் புதிய கேப்டன், முன்னணி வீரர்கள் இல்லாமல் விளையாடினர். உலகின் சிறந்த பவுலர் (பும்ரா) 3 போட்டியில் மட்டுமே விளையாடினார் என்பது மக்களுக்குத் தெரியும். இங்கிலாந்து வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்புடன் சென்றிருப்பார்கள். ஆனால் அங்கே இந்தியா அதிகமாக செயல்பட்டுள்ளது. என்னுடைய கருத்துப்படி 2 - 2 என்று தொடரை சமன் செய்தது இந்தியாவைப் பொறுத்த வரை மிகப்பெரிய வெற்றியாகும்” என்று கூறினார்.