ஆண்டர்சன்-தெண்டுல்கர் டிராபி: கில் இல்லை.. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்தான் - மொயீன் அலி

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது.;

Update:2025-08-08 20:04 IST

image courtesy:BCCI

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ டிராபிக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.

இந்த தொடரில் இந்திய அணி தரப்பில் கேப்டன் சுப்மன் கில் 754 ரன்கள், கே.எல்.ராகுல் 532 ரன்கள் மற்றும் ஜடேஜா 516 ரன்கள் குவித்து பேட்டிங்கில் அசத்தினர். குறிப்பாக இந்த தொடரில் கேப்டனாக அறிமுகம் ஆன சுப்மன் கில் ஏராளமான சாதனைகள் படைத்தார். இதனால் அவரை தொடர் நாயகனாக இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் தேர்வு செய்தார்.

இந்நிலையில் சுப்மன் கில்லை விட கே.எல். ராகுல்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மொயீன் அலி பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “கே.எல். ராகுல் போன்ற ஒருவர் எவ்வளவு சிறந்தவர் என்பதை மக்கள் உணரவில்லை என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக தொடக்க ஆட்டக்காரராக அவரது அருமையை மக்கள் உணரவில்லை. அவர் கடந்த தொடரிலும் இங்கிலாந்தில் அற்புதமாக இருந்தார். இந்த தொடரிலும் அவர் சிறப்பாக இருந்தார். உண்மையில் சுப்மன் கில் அதிக ரன்கள் எடுத்தார். ஆனால் கே.எல்.ராகுல்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்று நான் நினைக்கிறேன்.

நீண்ட வருடங்களாக விளையாடியதில் இப்போது தான் அவருடைய சிறந்த ஆட்டத்தைப் பார்த்துள்ளேன். அவர் ஒரு நல்ல வீரர். உலகின் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். நான் அதை சிறிது காலமாகச் சொல்லி வருகிறேன். சில நேரங்களில் அவர் சுதந்திரமாக விளையாடுவதில்லை என்று நான் கருதுகிறேன். அதையும் தாண்டி அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று நான் சொல்வேன்.

இது நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய ஒரு நல்ல தொடராக அமைந்தது. கில், ராகுல், ரூட் ஆகியோரைப் போல இரு அணியிலும் நல்ல தரமான பேட்டிங் விளையாடப்பட்டது. இத்தொடரை திரும்பிப் பார்க்கும்போது வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அபாரமாக செயல்பட்டுள்ளார்கள். இத்தொடரில் இரு அணிகளும் ஏராளமான சண்டை மற்றும் போராடும் குணத்தைக் காண்பித்துள்ளன” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்