ஆசிய கோப்பை: ஹர்திக் பாண்ட்யாவுக்கு கட்டளையிட்ட பி.சி.சி.ஐ.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.;

Update:2025-08-11 17:24 IST

image courtesy:PTI

மும்பை,

8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணியில் இடம்பெற உள்ள முன்னணி வீரர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவையும் உடற்தகுதியை நிரூபிக்க பி.சி.சி.ஐ. கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘என்சிஏ- க்கு ஒரு குறுகிய பயணம்’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடருக்கு பின் ஹர்திக் எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. இருப்பினும் ஜூலை மாத நடுப்பகுதியில் இருந்து பாண்ட்யா உடற்பயிற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பெங்களூரு பயணித்துள்ள அவர் இன்றோ அல்லது நாளையோ தனது உடற்தகுதியை நிரூபித்து விடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அவர், ஆசிய கோப்பையிலும் அசத்தும் பட்சத்தில் அது இந்தியாவிற்கு வலுவானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Tags:    

மேலும் செய்திகள்