ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்த அணிதான் கோப்பையை வெல்லும் - இந்திய முன்னாள் கேப்டன் கணிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது.;

Update:2025-08-10 20:13 IST

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி குறித்து இந்திய முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “அவர்கள் (இந்திய அணி) தற்போது இடைவேளையில் உள்ளனர். ஐ.பி.எல். தொடரில் விளையாடிய இந்திய வீரர்கள் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளார்கள். அடுத்ததாக அவர்கள் செப்டம்பர் 9 முதல் ஆசியக் கோப்பையில் விளையாட உள்ளனர். இந்தியா வலுவான அணி. சிவப்பு பந்து (டெஸ்ட்) கிரிக்கெட்டில் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும் பட்சத்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இன்னும் வலுவாக அசத்த முடியும். எனவே எனது கருத்துப்படி, இந்தியாதான் ஆசிய கோப்பையை வெல்லும். துபாயில் உள்ள நல்ல பிட்ச்களில் அவர்களை வீழ்த்துவது எதிரணிக்கு மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்