ஆசிய கோப்பை: துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டது ஏன்..? கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.;
image courtesy:PTI
மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்காளதேசம் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. மும்பையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர் ஆலோசனை நடத்தி அணியை தேர்வு செய்து அறிவித்தனர் . தேர்வு கூட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்து கலந்து கொண்டார்.
அந்த அணியில் இந்திய டெஸ்ட் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுப்மன் கில் ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து மீண்டும் டி20 அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் விளையாடினார். அதன்பின் நடைபெற்ற தொடர்களில் இந்திய டி20 அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்பட்டார். அந்த சூழலில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்சர் படேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இது பலரது மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “சுப்மன் கில் கடைசியாக கடந்தாண்டு இலங்கைக்கு சென்ற இந்திய டி20 அணியில் விளையாடினார். அங்கே நான் கேப்டனாக இருந்தபோது அவர் துணை கேப்டனாக செயல்பட்டார். அங்கேதான் நாங்கள் டி20 உலகக் கோப்பை தொடருக்கான புதிய சுழற்சியை துவங்கினோம். அதன் பின் அவர் டெஸ்ட் போட்டிகளில் பிசியாக மாறினார். டி20 கிரிக்கெட்டில் அதிக வாய்ப்புகளை பெறாத அவர் டெஸ்ட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் பிசியாக செயல்பட்டார். தற்போது அவர் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் தனது இடத்தை பிடித்துள்ளார். டி20 அணியில் அவரை கொண்டிருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்) ,சுப்மன் கில் (துணை கேப்டன் ), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா , ஹர்திக் பாண்ட்யா , ஷிவம் துபே, அக்சர் படேல் , ஜிதேஷ் சர்மா , பும்ரா, அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, குல்தீப், சஞ்சு சாம்சன் , ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.