அந்த சமயத்தில் வெற்றிக்கு 100 ரன்கள்.... - ஒற்றைக்கையுடன் பேட்டிங் செய்ய களமிறங்கியது குறித்து கிறிஸ் வோக்ஸ்
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்டில் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டது.;
image courtesy:PTI
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இதில் லண்டன் ஓவலில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது பீல்டிங் செய்கையில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்சுக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக எஞ்சிய நாட்களில் களமிறங்காத அவர் கடைசி நாளில் வேறு வழியின்றி 10-வது விக்கெட்டுக்கு பேட்டிங் செய்ய இறங்கினார். அப்போது வெற்றிக்கு 17 ரன் தேவையாக இருந்தது. ஒரு கையில் கட்டுபோட்டுக் கொண்டு ஒற்றைக்கையால் பேட் செய்ய வந்தது ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. இந்திய கேப்டன் சுப்மன் கில் களத்திலேயே அவரை பாராட்டினார்.
இந்நிலையில் அந்த சமயத்தில் வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்டாலும் தான் ஒற்றைக்கையுடன் பேட்டிங் செய்ய வந்திருப்பேன் என்று கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் மனம் திறந்து பேசியது பின்வருமாறு:- “நான் ஒரு பெரிய விஷயத்தில் அங்கம் வகிக்கப்போகிறேன் என்பது தெரியும். நான் எனக்காக மட்டும் அல்ல. எனது அணிக்காகவும், சக வீரர்களுக்காகவும் ஆடுகிறேன். அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக போராடி வெற்றியை நோக்கி அழைத்து வந்தனர். அந்த சமயத்தில் களம் இறங்குவது எனது கடமை என்பதை உணர்ந்தேன். வெற்றிக்கு 100 ரன்களுக்கு மேல் தேவையாக இருந்தாலும் கூட களம் கண்டு இருப்பேன்.
நான் நுழைந்த போது, மைதானத்தில் இருந்து வந்த கைதட்டல் உற்சாகம் அளித்தது. இந்திய கேப்டன் சுப்மன் கில்லும் என்னை பாராட்டினார். சில இந்திய வீரர்களும் அந்த சமயத்தில் மரியாதையுடன் நடந்து கொண்டனர். எனது இடத்தில் எந்த வீரர் இருந்தாலும் கண்டிப்பாக பேட்டிங் செய்ய வந்திருப்பார். ஆனால் சாதகமான முடிவு கிடைக்காமல் போனது மிகுந்த வேதனை அளித்தது” என்று கூறினார்.