சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதி: தோல்விக்குப்பின் தென் ஆப்பிரிக்கா கேப்டன் கூறியது என்ன..?
சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது.;
image courtesy: ICC
லாகூர்,
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், வில்லியம்சன் 102 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 363 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்டெ்டுக்கு 312 ரன்களே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 100 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் சான்ட்னெர் 3 விக்கெட்டும், மேட் ஹென்றி, பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறுகையில், "362 இந்த மைதானத்தில் அடிக்கக்கூடிய ஒரு ஸ்கோர்தான். ஒருவேளை 350 ரன்கள் வரை இருந்திருந்தால் கூட எங்களால் ஸ்கோரை எட்ட முயற்சித்திருப்போம். இந்த போட்டியில் நானோ அல்லது ரஸ்சி வான்டெர் டஸனோ களத்தில் இறுதிவரை நின்று விளையாடி இருக்க வேண்டும். ஆனால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு எங்களை சுருட்டி விட்டனர்.
அதேபோன்று நியூசிலாந்து அணியின் வீரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த போட்டியில் நாங்கள் அடைந்த தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக நாங்கள் வழங்கிய வாய்ப்புகள்தான் காரணம் என்று நினைக்கிறேன். ஏனெனில் எதிரணியின் வீரர்களுக்கு நாம் வாய்ப்புகளை வழங்கும்போது அவர்கள் ஆட்டத்திற்கு வந்து விடுகிறார்கள். முக்கியமான தருணத்தில் நாங்கள் ஆட்டத்தை தவறவிட்டு விட்டோம்" என்று கூறினார்.