சாம்பியன்ஸ் டிராபி தொடர்: சாம்சன் புறக்கணிப்பு.. கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சாம்சன் இடம்பெறவில்லை.;

Update:2025-01-19 10:47 IST

image courtesy: AFP

திருவனந்தபுரம்,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ள வேளையில், சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் சமீப காலமாக நல்ல பார்மில் இருக்கும் சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனாலும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கொந்தளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்,தனது எக்ஸ் பக்கத்தில், "சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சராசரி 56.66, விஜய் ஹசாரே போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் 212 ரன்கள், கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இல்லை. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் ஈகோ பிரச்சினையில் ஒரு வீரரின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள்" என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்