சாம்பியன்ஸ் டிராபி தொடர்; இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறாதது ஏன்..? - அஜித் அகர்கர் விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறவில்லை.;
Image Courtesy: AFP / FILE IMAGE
மும்பை,
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் மட்டுமின்றி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பெறவில்லை. இந்நிலையில், இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறாதது ஏன்..? என்பது குறித்து இந்திய தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அது (கருண் நாயர் செயல்பாடு) மிகவும் ஸ்பெஷல் செயல்பாடு. ஒருவர் 752 ரன்களை 752 என்ற சராசரியில் அடிப்பது அற்புதமானது.
அது போன்ற செயல்பாடுகளை பற்றி நாங்களும் பேசினோம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தற்போது இந்திய அணியில் வாய்ப்பைப் பிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்கள் அனைவருமே 40-க்கும் மேற்பட்ட சராசரியை கொண்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். துரதிஷ்டவசமாக அனைவரையும் உங்களால் அணியில் தேர்ந்தெடுக்க முடியாது, இது 15 பேர் கொண்ட அணி மட்டுமே. அதே சமயம் அது போன்ற செயல்பாடுகள் உங்களுடைய கவனத்தை ஈர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.