சாம்பியன்ஸ் டிராபி: வெற்றிக்குப்பின் ரவீந்திர ஜடேஜா கூறியது என்ன..?

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது.;

Update:2025-03-10 16:53 IST

image courtesy:twitter/@BCCI

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி நெருக்கடியில் சிக்கியபோது கே.எல்ராகுல் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி சிறப்பாக விளையாடி நெருக்கடியை சமாளித்ததுடன் அணிக்கும் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் ஜடேஜா பவுண்டரி அடித்து போட்டியை முடித்து வைத்தார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் ஜடேஜா அளித்த பேட்டியில், "பேட்டிங் வரிசையில் நான் இறங்கும் இடம் ஒன்று என்னை ஹீரோவாக்கும். இல்லை என்றால் என்னை ஜீரோவாக்கும். இறுதிப்போட்டியில் பரபரப்பான கட்டத்தில் கே எல் ராகுலும் ஹர்திக் பாண்டியாவும் பார்ட்னர்ஷிப் சேர்த்து சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் ரன்கள் எடுத்தது ஆட்டத்தை மாற்றும் தருணமாக அமைந்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இல்லை.

இது ஒரு முக்கியமான போட்டி, இந்தியாவுக்காக விளையாடுவதும், நாட்டிற்காக சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதும் பெரியது. பல வருடங்களாக விளையாடிய பிறகும் வெற்றிபெறும் அணிகளில் நீங்கள் ஒரு பகுதியாக இல்லாதபோது வருத்தப்படுகிறீர்கள். ஆனால், 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் இப்போது சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டு போட்டிகளையும் வெல்வதில் போதுமான அளவு உடற்தகுதியுடன் இருக்கவும், மிக உயர்ந்த மட்டத்தில் செயல்படவும் முடிந்தது எனக்கு அதிர்ஷ்டம்" என்று கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்