சேப்பாக்கத்தின் சிங்கம் - அஸ்வினுக்கு சிஎஸ்கே நெகிழ்ச்சி வாழ்த்து
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று ஓய்வு அறிவித்தார்.;
image courtesy:PTI
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐ.பி.எல். மற்றும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக 38 வயதான அஸ்வின் நேற்று அதிரடியாக அறிவித்தார். அவர் வெளிநாடுகளில் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார். அஸ்வின் கடந்த 2009-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். 2010, 2011-ம் ஆண்டு கோப்பையை வென்ற சென்னை அணியில் அங்கம் வகித்த அவர் 2016-ம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் (தற்போது அந்த அணி கிடையாது) அணிக்கு மாறினார்.
அதன் பிறகு பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தலா 2 ஆண்டும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 3 ஆண்டும் இடம் பெற்றார். கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கிய இடமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பினார். அவர் ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 221 ஆட்டங்களில் ஆடி 187 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அத்துடன் 833 ரன்களும் எடுத்துள்ளார்.
இந்த சூழலில் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் நெகிழ்ச்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “சேப்பாக்கத்தின் சொந்த சிங்கம். கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன். முதல் முறையாக மஞ்சள் நிற சீருடையுடன் புழுதி பறக்கும் சேப்பாக்கம் ஆடுகளத்தில் அறிமுகமாகி உலக அரங்கில் சுழற்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தியதுடன், அணிக்காக எல்லாவற்றையும் வழங்கினீர்கள். நமது பாரம்பரியத்தின் துணாக இருந்து சேப்பாக்கம் கோட்டையில் கர்ஜித்தீர்கள். நன்றி அஸ்வின்” என்று பதிவிட்டுள்ளது.