பும்ரா விளையாடாத போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வெற்றியா..? சச்சின் காட்டம்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா விளையாடாத 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.;
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடரில் இந்திய அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமையை கருத்தில் கொண்டு 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். இதில் அவர் விளையாடாத அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. அவர் விளையாடிய போட்டிகளில் 2-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டது. இதனால் அவரை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா மீதான விமர்சனங்களுக்கு இந்திய முன்னாள் வீரரான சச்சின் தெண்டுல்கர் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “இந்த தொடரை ஜஸ்பிரித் பும்ரா உண்மையிலேயே சிறப்பாக தொடங்கினார். முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார். 2-வது டெஸ்டில் அவர் விளையாடவில்லை. அதன் பிறகு 3-வது மற்றும் 4-வது டெஸ்டில் ஆடினார். இதில் ஒரு டெஸ்டில் 5 விக்கெட் கைப்பற்றினார். அவர் விளையாடாத டெஸ்டில் மட்டுமே இந்திய அணி வெற்றி கண்டுள்ளது என பலரும் விமர்சிப்பதை அறிவேன். ஆனால் என்னை பொறுத்தவரை இது ஏதேச்சையாக நடந்த விஷயமாகும். அவர் ஒரு தரமான பந்து வீச்சாளர். இதுவரை அவர் சாதித்திருப்பது நம்ப முடியாத ஒன்று. சந்தேகத்துக்கு இடமின்றி அவர் தொடர்ந்து பிரமாதமாக செயல்படும் ஒரு பவுலர்” என்று கூறினார்.