டிரா' விவகாரம்: இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதிலடி
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.;
மான்செஸ்டர்,
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதம் அடித்தனர்.
311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து இருந்தது. கே.எல். ராகுல் 87 ரன்களுடனும், சுப்மன் கில் 78 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த சூழலில் நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 137 ரன்கள் எடுத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் ராகுல், சுப்மன் கில் தொடர்ந்து பேட் செய்தனர். இருவரும் பொறுமையான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் ராகுல் 90 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல்-சுப்மன் கில் இணை 188 ரன்கள் திரட்டியது.
இதைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் வந்தார். நிலைத்து நின்று ஆடிய கேப்டன் சுப்மன் கில் 228 பந்துகளில் தனது 9-வது சதத்தை எட்டினார். நடப்பு தொடரில் அவர் அடித்த 4-வது சதம் இதுவாகும். சதம் அடித்த சற்று நேரத்தில் சுப்மன் கில் (103 ரன்கள்) அவுட்டானார்.
அடுத்து ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்ற நோக்குடன் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கும் ஓடவிட்டனர். இந்த ஜோடியில் ரவீந்திர ஜடேஜா, ஹாரி புரூக் பந்து வீச்சில் சிக்சர் தூக்கி தனது 5-வது சதத்தை கடந்தார். அடுத்த ஒரு ஓவர் கழித்து வாஷிங்டன் சுந்தர் தனது முதல் சதத்தை எட்டினார். அத்துடன் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முன்னதாக இந்த போட்டி டிராவில் முடிவதற்கு 5 ஓவருக்கு முன்பாக இங்கிலாந்து வீரர்கள் ஆட்டத்தை டிராவில் முடிக்க முன்வந்தனர். ஆனால் இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதம் அடிக்கும் வாய்ப்புக்காக டிராவை தள்ளி போட்டனர். இதனால் இரு அணியினருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
இருப்பினும் இந்த போட்டி முடிவடைந்த பின்னர் இங்கிலாந்தை சேர்ந்த சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் இந்திய அணியை விமர்சித்தனர். இந்திய அணி விளையாட்டை நேர்மைத்தன்மையுடன் விளையாடாமல் சொந்த சாதனைகளுக்காக விளையாடியதாக குறை கூறினர். இநத விவகாரம் பேசு பொருளாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து போட்டி முடிந்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு கம்பீர் தனது பாணியில் பதிலடி கொடுத்தார்.
இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு:- "ஒருவர் 90 ரன்களிலும் மற்றொருவர் 85 ரன்களிலும் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அவர்கள் சதத்தை அடிக்க தகுதியானவர்கள் இல்லையா?. அவர்கள் வெளியேறியிருப்பார்களா? இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் 90 அல்லது 85 ரன்களில் பேட்டிங் செய்து, முதல் டெஸ்ட் சதம் அடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால், நீங்கள் அவர்களை அதைச் செய்ய அனுமதிக்க மாட்டீர்களா? எனவே இவை அனைத்தும் களத்தில் விளையாடுபவர்களின் முடிவு. அவர்கள் அந்த வழியில் விளையாட விரும்பினால் அது அவர்களுடைய முடிவு. என்னைப் பொறுத்த வரை அந்த இருவரும் சதத்தை அடிக்க தகுதியானவர்கள். இறுதியில் அதை அவர்கள் பெற்றார்கள்" என்று கூறினார்.