இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கம்பீர் அந்த தவறுகளை செய்யவில்லையெனில் இந்தியா.. - மஞ்ச்ரேக்கர் விமர்சனம்
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.;
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்நிலையில் அந்தத் தொடரில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் சரியான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்திருந்தால் 3 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றிருக்கும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “கம்பீர் தேர்வில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ராகுல், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு துறையைப் பார்த்து நான் பயப்பட்டேன். குறிப்பாக கம்பீர் கையாண்ட வினோதமான தந்திரங்கள் மற்றும் பிளேயிங் லெவன், பவுலிங் மாற்றங்கள் ஆகியவை பயத்தைக் கொடுத்தன. ஒருவேளை அதை இன்னும் சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தால் 3 - 1 என்ற கணக்கில் இந்தியா எதிரணியை தோற்கடித்திருக்கும்.
குல்தீப் யாதவ் தொடர் முழுவதும் விளையாடாதது கடைசி வரை அனைவருக்கும் பெரிய ஆச்சரியமாகவே இருந்தது. நீங்கள் பலவீனமான பந்துவீச்சை வைத்துக் கொண்டு எதிரணியிடம் மோதினீர்கள். மேலும் பேட்டிங்கில் நீங்கள் செய்த விசித்திரமான தேர்வுகள் தோல்வியை கொடுத்திருக்கலாம். இதே போன்ற அணுகுமுறையை கடந்த ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்தியதாலேயே இந்தியா தோல்விகளை சந்தித்தது.
தொடர் சமனில் முடிந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் இந்த தவறுகள் பற்றி தேர்வுக்குழுவினர் மற்றும் பி.சி.சி.ஐ. கேள்வி கேட்கவில்லை என்றால், இந்தியா மற்றொரு தொடரில் தடுமாற்றத்தை சந்திக்க நேரிடும். சொல்லப்போனால் அந்த தொடரில் 2 அணிகளுமே பலவீனமான பவுலிங் துறையைக் கொண்டிருந்தன” என்று கூறினார்.