இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: 5 போட்டிகளிலும் டாசில் தோல்வியடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில்
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 15-வது டாஸ் தோல்வி இதுவாகும்.;
லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கியுள்ளார்.
முன்னதாக இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிமுகம் ஆன சுப்மன் கில் 5 போட்டிகளிலும் டாசில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 15-வது டாஸ் தோல்வி இதுவாகும்.