ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு அபராதம்.. காரணம் என்ன..?

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.;

Update:2025-08-31 14:17 IST

image courtesy:ICC

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி ஹராரே நகரில் நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. பதும் நிசாங்கா (76 ரன்), ஜனித் லியானகே (70 ரன்), கமிந்து மென்டிஸ் (57 ரன்) அரைசதம் அடித்தனர்.

அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே பென் கர்ரன் (70 ரன்), பொறுப்பு கேப்டன் சீன் வில்லியம்ஸ் (57 ரன்) மற்றும் சிகந்தர் ராசா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இலக்கை நெருங்கியது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா வீசினார். அவர் முதல் 3 பந்துகளில் சிகந்தர் ராசா (92 ரன்), பிராட் இவான்ஸ் (0), ரிச்சர்ட் நரவா(0) ஆகியோரது விக்கெட்டுகளை வரிசையாக கபளீகரம் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். அடுத்த 3 பந்தில் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஜிம்பாப்வே 8 விக்கெட்டுக்கு 291 ரன்களே எடுத்தது. இதனால் இலங்கை அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் மதுஷன்கா 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. இதன் காரணமாக ஐ.சி.சி., இலங்கை அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 5 சதவீதம் அபராதமாக விதித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்