முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.;
image courtesy:twitter/@BCCIWomen
சவுத்தம்டான்,
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவர் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது.
அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சவுத்தம்டனில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சோபியா டங்க்லி 83 ரன்களும், டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் 53 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் கிராந்தி கவுட் மற்றும் சினே ராணா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 259 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி இங்கிலாந்து பந்துவீச்சை எளிதில் சமாளித்து வெற்றியை நோக்கி பயணித்தது. 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 262 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 62 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48 ரன்களும் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.