அவர் இந்திய அணியின் 'பிக்சட் டெபாசிட்' - முன்னாள் வீரர் புகழாரம்
இந்தியா-இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.;
image courtesy:PTI
லீட்ஸ்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரது செஞ்சுரியால் முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. லோகேஷ் ராகுல் (47 ரன்), கேப்டன் சுப்மன் கில் (6 ரன்) களத்தில் நின்றனர்.
இந்த சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது வரை இந்திய அணி 48 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் அடித்து 159 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மட்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசி வருகிறார். மற்ற இந்திய பவுலர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும் இந்தியாவின் வெற்றிக்கு பும்ரா மட்டுமே தனி ஆளாக போராடினார்.
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் பிக்சட் டெபாசிட் என்று முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். எனவே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜஸ்பிரித் பும்ராவுக்கு புகழாரம் சூட்ட வேண்டும். அவர் ஒரு அற்புதமான வீரர். அவர் இந்திய அணியின் நிலையான வைப்புத்தொகை (பிக்சட் டெபாசிட்) போன்றவர். உங்களுக்கு தேவைப்படும்போதெல்லாம், அவரிடம் பந்தை கொடுத்தால், அவர் விக்கெட்டை எடுக்கிறார். அவர் முற்றிலும் அற்புதமானவர். ஜஸ்பிரித் பும்ரா மேலும் ஒரு 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்குங்கள்,
ஏனென்றால் அவர் முற்றிலும் விலைமதிப்பற்றவர். அந்த நபர் வித்தியாசமானவர். இவரது பந்துவீச்சில் பல எளிய கேட்ச்கள் விடப்பட்டன. ஒருவேளை அதையெல்லாம் சரியாக பிடித்திருந்தால் இந்த இன்னிங்சில் 5 அல்ல 8-9 விக்கெட்டுகளை கூட அவர் வீழ்த்திருப்பார். அதுமட்டும் இன்றி இந்திய அணியின் முன்னிலையும் 160 வரை இருந்திருக்கும்" என்று கூறினார்.