எங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்...ஆஸ்திரேலிய கேப்டன்
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.;
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - ரோகித் சர்மா களமிறங்கினர். சுப்மன் கில் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி கைகோர்த்தார். முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆன விராட் கோலி இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் கடந்த ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோகித் அதனை இந்த போட்டியிலும் தொடர்ந்தார். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதத்தை கடந்தனர்.
அதிரடி காட்டிய ரோகித் சதம் அடித்து அசத்தினார். இவர்களின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி எந்த வித சிக்கலுமின்றி இலக்கை எட்டி ஆறுதல் வெற்றி பெற்றது. வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில் ,போட்டிக்கு பின்னர் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியதாவது,
கடந்த 10 வருடங்களாக ரோகித் மற்றும் விராட் இதை செய்வதை பார்த்திருக்கிறோம். எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது . ஆனால் அமையவில்லை . எங்கள் இளம் வீரர்கள் இதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளனர். இந்தியா உலகின் நம்பர் 1 அணி. முதல் 2 போட்டிகளில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது பெருமிக்குரிய விஷயம். நாங்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்.எங்கள் அணி வீரர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.என தெரிவித்தார் .