நான் எப்போதும் 'தல' ரசிகன்தான் - விமர்சனங்களுக்கு ராயுடு பதிலடி

சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு ராயுடு பதிலடி கொடுத்துள்ளார்.;

Update:2025-04-10 21:46 IST

image courtesy: PTI

மும்பை,

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி மிகவும் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 5 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

இதனால் சென்னை அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் சென்னை அணியின் தோல்விகளுக்கு மகேந்திரசிங் தோனிதான் காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மகேந்திரசிங் தோனிக்கு ஆதரவாக இந்திய முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தொடர் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் இவரையும் விட்டு வைக்காத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அம்பத்தி ராயுடு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அம்பத்தி ராயுடு, "நான் தல (தோனி) ரசிகனாக இருந்தேன். தல ரசிகனாக இருக்கிறேன். நான் எப்போதும் தல ரசிகனாகவே இருப்பேன். யார் என்ன நினைத்தாலும் செய்தாலும் பரவாயில்லை. அது ஒரு சதவீத வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.

எனவே என்னை விமர்சிப்பதற்காக பணம் செலவிடுவதை நிறுத்துங்கள். அதை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள். பல ஏழை மக்கள் பயனடையலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகேந்திரசிங் தோனியை செல்லமாக 'தல' என்றழைப்பது வழக்கம். 

Tags:    

மேலும் செய்திகள்