இவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் - குல்தீப் யாதவ்
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.;
Image Courtesy: @IPL / @DelhiCapitals
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி அணிக்காக இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆடி வருகிறார். சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
இந்திய அணியின் முன்னணி வீரராக திகழும் குல்தீப் யாதவ், ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் இருந்த போது சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,
ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் போட்டியில் கண்டிப்பாக ஆதிக்கம் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சுனில் நரைன் போன்ற வீரர்கள் அதனை தொடர்ச்சியாக செய்திருக்கிறார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது, சுனில் நரைனிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். பந்துவீச்சு லென்த்துக்கு அவர் எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்துவார்.
முன்பெல்லாம், நான் என்னுடைய திறமையை மட்டுமே நம்பி செயல்படுவேன். ஆனால், தற்போது சுனில் நரைன் கூறிய விஷயங்கள் முற்றிலும் சரியானவை என்பதை உணர்கிறேன். நான் என்னுடைய பந்துவீச்சு லென்த்தில் அதிக கவனம் கொடுக்கிறேன். அது எனது பந்துவீச்சில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.