ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: சுப்மன் கில் சறுக்கல்

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முகமது சிராஜ் 12 இடங்கள் முன்னேறியுள்ளார்.;

Update:2025-08-07 14:37 IST

image courtesy:ICC

துபாய்,

இந்தியா-இங்கிலாந்து 5-வது போட்டி மற்றும் ஜிம்பாப்வே - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் (5-வது போட்டி) சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதே டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் விளாசிய (118 ரன்) இந்திய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 8-ல் இருந்து 5-வது இடத்துக்கு வந்துள்ளார்.

ஆனால் கடைசி டெஸ்டில் சொதப்பிய இந்திய கேப்டன் சுப்மன் கில் 4 இடங்கள் சறுக்கி டாப்-10 இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அதன்படி கில் 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதேபோல் கடைசி டெஸ்டில் ஆடாத ரிஷப் பண்ட் ஒரு இடம் பின்தங்கி 8-வது இடத்தில் உள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அரைசதம் அடித்த (80 ரன்கள்) எடுத்த நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 4 இடங்கள் உயர்ந்து 9-வது இடத்தை பெற்றுள்ளார்.

டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-3 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா முதலிடமும் தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபடா 2-வது இடமும், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 3-வது இடமும் வகிக்கிறார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 12 இடங்கள் எகிறி 15-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரவரிசை இதுவாகும். 8 விக்கெட்டுகள் அள்ளிய மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 25 இடங்கள் ஏற்றம் கண்டு 59-வது இடத்தை பெற்றுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்ற நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இதே போல் ஓவல் டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் இரு இடம் நகர்ந்து முதல் முறையாக டாப்-10 இடத்தை பிடித்துள்ளார். அவர் மிட்செல் ஸ்டார்க்குடன் இணைந்து 10-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ‘நம்பர் 1’ ஆக வலம் வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்