தேர்வு குழு தலைவராக நான் இருந்திருந்தால் விராட் கோலியை... - இந்திய முன்னாள் வீரர்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி கடந்த மே மாதம் விடைபெற்றார்.;
image courtesy:PTI
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த மே மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.
குறிப்பாக தோனிக்குப்பின் கேப்டன் பதவியை ஏற்ற விராட் கோலி இந்திய அணியை பல வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை அலங்கரிக்க வைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
அப்படிப்பட்ட அவர் அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 36 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது பலரது மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக பார்டர் - கவாஸ்கர் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடர்களில் விராட் மற்றும் ரோகித் சொதப்பியதால் அவர்களை அணியிலிருந்து நீக்க தேர்வுக்குழு மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்னதாக இருவரும் தாங்களாகவே ஓய்வை அறிவித்து விட்டனர்.
இந்நிலையில் தான் தேர்வு குழு தலைவராக இருந்திருந்தால் விராட் கோலியை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி விட்டு ஓய்வு பெறுங்கள் என்று வற்புறுத்தியிருப்பேன் என இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “நான் இந்திய தேர்வு குழு தலைவராக இருந்திருந்தால், இங்கிலாந்து தொடரில் விளையாடிய பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற விராட்டை வற்புறுத்தியிருப்பேன். ஏனெனில் இந்த தொடரில் அவரது தரமும் அனுபவமும் நமக்கு தேவைப்பட்டது ”என்று கூறினார்.