விமர்சித்த நானே சொல்கிறேன் சுப்மன் கில் அதனை செய்யாமல் விடமாட்டார் - மைக்கேல் வாகன் பாராட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் சுப்மன் கில் 269 ரன்கள் குவித்தார்.;

Update:2025-07-04 14:41 IST

image courtesy:BCCI

பர்மிங்காம்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 18 ரன்களுடனும் , ஹாரி புரூக் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து அசத்திய இந்திய கேப்டன் சுப்மன் கில்லை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இந்த தொடருக்கு முன்னதாக சுப்மன் கில்லை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தற்போது பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "தொடரின் தொடக்கத்தில், அவரது (சுப்மன் கில்) சராசரி 35, அது அவரது தரத்திற்கு போதுமானதாக இல்லை என்று நான் சொன்னேன். இந்தத் தொடரின் முடிவில் அவர் சராசரியாக 45 ரன்களை எடுப்பார் என்று நினைக்கிறேன். அவர் அதனை செய்யாமல் விட மாட்டார். கேப்டனாக சிறப்பாகத் துவங்கியுள்ள அவர் 2 போட்டிகளில் 2 சதங்கள் அடித்துள்ளது அற்புதமானது.

2-வது போட்டியில் சுப்மன் கில் டாஸ் தோற்றது சிறந்தது. கவாஸ்கர் சொன்னது போல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஸ்விங், வேகம் அதிகமாக இல்லாத நல்ல ஆடுகளத்தில் அசத்துவார்கள். அவருடைய கால்கள் நன்றாக நகர்கிறது. அவருடைய டெக்னிக் சிறப்பானதாக இருக்கிறது. இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனநிலையை அவர் கொண்டுள்ளார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்