இந்தியா - இங்கிலாந்து இளையோர் முதல் டெஸ்ட் டிரா
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;
பெக்கன்ஹாம்,
இந்தியா -இங்கிலாந்து ஜூனியர் கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெக்கன்ஹாமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 112.5 ஓவர்களில் 540 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 102 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அலெக்ஸ் கிரீன் மற்றும் ரால்பி ஆல்பர்ட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 114.5 ஓவர்களில் 439 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ராக்கி பிளிண்டாப் 93 ரன்களிலும், ஹம்சா ஷேக் 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹெனில் படேல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 101 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 350 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 4-வது மற்றும் கடைசி நாளில் 7 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. ரால்பி ஆல்பர்ட் 9 ரன்களுடனும், ஜாக் ஹோம் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செல்ம்ஸ்போர்டில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.