வெல்லப்போவது யார்? இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிற்பகலில் காண சிறப்பு ஏற்பாடு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.;

Update:2025-02-23 06:59 IST

சென்னை,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடக்கிறது.

இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான இந்தியா, நடப்பு சாம்பியனும், பரம எதிரியுமான பாகிஸ்தானை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் என்றாலே எப்போதும் இரு நாட்டு ரசிகர்களிடம் மட்டுமின்றி வீரர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பும், பதற்றமும் பற்றிக்கொள்ளும். இதேபோல் இந்த ஆட்டத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் இந்த போட்டி தமிழகத்தின் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மெரினாவில் விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு எதிரிலும், பெசன்ட் நகரில் போலீஸ் பூத் அருகிலும் நேரடியாக ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை கண்டுகளிக்க கிரிக்கெட் ரசிகர்கள் கடற்கரையில் இப்போதே குவியத்தொடங்கி உள்ளனர். இந்த போட்டியில் வெல்லப்போவது யார்? என்பது ரசிகர்களிடையே பேசும் பொருளாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்