கோப்பை வழங்கப்படாததற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கடும் எதிர்ப்பு
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.;
கோப்புப்படம்
துபாய்,
துபாயில் நடந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனும், பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வி பரிசுக் கோப்பையை வழங்க இருந்தார்.
ஆனால் அவரிடம் இருந்து கோப்பையை வாங்கமாட்டோம் என்று இந்திய அணி மறுத்து விட்டது. அவருக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் கலீத் அல்ஜரூனிடம் இருந்து பெற்றுக்கொள்கிறோம் என்று இந்திய அணி கூறியது. ஆனால் இதனை ஏற்க மறுத்த மொசின் நக்வி கோப்பையை தன்னோடு எடுத்து கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படவில்லை. வெறுங்கையுடன் வெற்றியை கொண்டாடினர்.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் துபாயில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகளாக துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் பொருளாளர் ஆஷிஷ் ஷிலார் ஆகியோர் கலந்து கொண்டு கோப்பை பிரச்சினையை எழுப்பினர்.
வெற்றி பெற்ற அணியிடம் கோப்பையை வழங்க வேண்டும். இது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கோப்பையாகும். தனிப்பட்ட நபருக்கு சொந்தமானது கிடையாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் மொசின் நக்வி கோப்பையை வழங்கமாட்டோம் என்ற முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் இந்த கோப்பை இந்தியாவுக்கு எப்போது வரும் என்பதில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது.