இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் இன்று நடக்கிறது.;

Update:2025-07-16 04:32 IST

image courtesy: BCCI Women twitter

சவுத்தம்டன்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி முதல்முறையாக (3-2 என்ற கணக்கில்) வென்று வரலாறு படைத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி கடைசியாக மே மாதம் நடந்த இலங்கை, தென்ஆப்பிரிக்கா பங்கேற்ற முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக இப்போது இங்கிலாந்து ஒருநாள் தொடரையும் வென்றால், செப்டம்பர் 30-ந்தேதி உள்ளூரில் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு (50 ஓவர்) தயாராவதற்கு ஊக்கமளிக்கும்.

முத்தரப்பு தொடரில் 276, 275, 337, 342 ரன்கள் வீதம் குவித்த இந்திய அணி அதே போன்று ரன்வேட்டை நடத்த ஆர்வம் காட்டுகிறது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'ஒரு நாள் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் 300 ரன்களுக்கு மேல் எடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். அதிக ரன்கள் எடுக்கும் போது, எதிரணியை கட்டுப்படுத்த பவுலர்களுக்கு சவுகரியமாக இருக்கும்' என்று குறிப்பிட்டார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 ரன்களை கடந்த வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற பிரதிகா ரவால், ஸ்மிர்தி மந்தனாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக இறங்குகிறார். மிடில் வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சரனி, சினே ராணா, ராதா யாதவ் நம்பிக்கை அளிக்கிறார்கள். பிரதான பவுலர்கள் ரேணுகா சிங், திதாஸ் சாது, பூஜா வஸ்ட்ராகர் காயத்தால் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியில் கேப்டன் நாட் சிவெர், 'நம்பர் ஒன்' சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியிருப்பது அவர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும். மற்றபடி டாமி பிமோன்ட், சோபியா டங்லி, அலிஸ் கேப்சி, லாரென் பெல், சார்லி டீன் போன்ற முன்னணி வீராங்கனைகளும் அணியில் தொடருகிறார்கள். அவர்கள் 20 ஓவர் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 76 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 34-ல் இந்தியாவும், 40-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 2 ஆட்டத்தில் முடிவில்லை. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்