மகளிர் டி20: இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா களமிறங்கினர்;
பெர்மிங்கம்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் 4 ஆட்டங்களில் 3ல் இந்தியாவும், 1ல் இங்கிலாந்தும் வெற்றிபெற்றுள்ளது. டி20 தொடரை இந்தியா ஏற்கனவே வென்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 ஆட்டம் பெர்மிங்கமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா களமிறங்கினர். ஸ்மிருதி 8 ரன்னில் அவுட் ஆன நிலையில், அடுத்து களமிறங்கிய ஜெரேமியா 1 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அவர் 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்துள்ளது. இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.