மகளிர் உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு ரூ. 1.5 கோடி பரிசு
இவர் காயம் காரணமாக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் ஆடவில்லை.;
புதுடெல்லி,
அண்மையில் முடிவடைந்த 13-வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. உலகக் கோப்பையை முதல்முறையாக உச்சி முகர்ந்த இந்திய அணியை பிரதமர், ஜனாதிபதி நேரில் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் பரிசு மழை கொட்டியது. அதேபோல், இந்திய அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் பரிசுகளை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் மகளிர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த டெல்லி வீராங்கனை பிரதிகா ராவலுக்கு அம்மாநில முதல் - மந்திரி ரேகா குப்தா ரூ.1.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.
25 வயதான பிரதிகா ராவல் உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 308 ரன்கள் குவித்தார். நியூசிலாந்துக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் சதமடித்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் முக்கிய பங்கு வகித்தார். எனினும் இந்த ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் இருந்து விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை வெல்வதில் பங்கு வகித்ததால் அவருக்கு டெல்லி அரசு பரிசுத்தொகை வழங்கி உள்ளது.