இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை பாராட்ட வேண்டும் - மிட்செல் சான்ட்னெர்

எங்களுக்கு சவால்கள் இருந்தாலும் அதையும் தாண்டி நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என மிட்செல் சான்ட்னெர் கூறியுள்ளார்.;

Update:2025-03-10 10:50 IST

image courtesy: PTI

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.

இந்நிலையில், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும் என நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் கூறியுள்ளார். இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின் மிட்செல் சான்ட்னெர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது எங்களுக்கு நல்ல தொடராக அமைந்தது. எங்களுக்கு சவால்கள் இருந்தாலும் அதையும் தாண்டி நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். இன்று நல்ல அணியாக செயல்பட்டவர்களிடம் நாங்கள் தோற்றோம் அவ்வளவு தான்.

பல்வேறு நேரங்களில் எங்களுடைய பல்வேறு வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். கேப்டனாகவும் அணியாகவும் நீங்கள் அதைத்தான் கேட்பீர்கள். பவர் பிளே ஓவர்களில் நாங்கள் சில விக்கெட்டுகளை இழந்ததால் மீண்டும் சிறப்பாக விளையாட வேண்டி இருந்தது. ஆனால் அப்போது நன்றாக பவுலிங் செய்த இந்தியாவின் ஸ்பின்னர்களுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். அவர்கள் அணியில் இருக்கும் நால்வருமே உலகத்தரம் வாய்ந்தவர்கள். நாங்கள் எதிர்பார்த்த இலக்கில் 20 - 25 ரன்கள் குறைவாக எடுத்தோம்.

அதை வைத்து வெற்றிக்கு முடிந்தளவுக்கு போராட முயற்சித்தோம். கிளென் பிலிப்ஸ் தொடர்ந்து இப்படி அபாரமான கேட்ச்களை பிடித்து வருகிறார். இது போன்ற மைதானத்தில் பவர் பிளே தான் நீங்கள் பேட்டிங் செய்வதற்கு சிறந்த நேரமாகும். அதை கில் - ரோகித் சிறப்பாக பயன்படுத்தினர். குறிப்பாக ரோகித் சர்மா பந்துக்கு நிகராக ரன்கள் எடுத்தது எங்களை பின்னங்கால் வைக்க வைத்தது.

ரச்சின் ரவீந்திரா இவ்வளவு இளம் வயதிலேயே நல்ல புரிவை கொண்டு முக்கியமான நேரங்களில் அசத்துகிறார். அவருக்கு பெரிய வருங்காலம் இருக்கிறது. முதல் முறையாக கேப்டனாக ஐ.சி.சி. தொடரில் நான் மகிழ்ச்சியாக விளையாடினேன். எங்களுடைய பல்வேறு வீரர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் முன் வந்து அசத்தினார்கள். இது நல்ல தொடராக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்