சர்வதேச கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த ஜோ ரூட்

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.;

Update:2025-08-04 14:34 IST

image courtesy:ICC

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 34 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இங்கிலாந்தின் பென் டக்கெட்டும், பொறுப்பு கேப்டன் ஆலி போப்பும் பேட்டிங் செய்தனர். அரைசதத்தை கடந்த டக்கெட் 54 ரன்னிலும், ஆலி போப் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 106 ரன்களுடன் தடுமாற்றத்திற்குள்ளானது.

இந்த சூழலில் 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், ஹாரி புரூக்கும் கைகோர்த்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினர். ஹாரி புரூக் 111 ரன்களிலும், ஜோ ரூட் 105 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட் அடித்த 16-வது சதம் இதுவாகும். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர் என்ற ஸ்டீவ் சுமித்தின் மாபெரும் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். இருவரும் இந்தியாவுக்கு எதிராக தலா 16 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 76.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்ததால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 2 ரன்களுடனும், ஜேமி ஓவர்டான் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. மறுபுறம் இந்தியா வெற்றி பெற 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இத்தகைய பரபரப்பான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்